திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் இன்று புகார் மனு அளித்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்துக்கள் பற்றிய அவதூறான கருத்தை நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக ஆ.ராசா கூறியதில் இருந்தே அவருக்கு சட்ட அறிவு சுத்தமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
அவரின் பேச்சு இந்துக்களிடையே கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ராசாவின் கருத்தை அவர் ஆதரிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசா உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பாஜக மகளிர் அணி சார்பில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதே போல் ஆ.ராசா மீது இந்து முன்னணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், பாஜக கவுன்சிலர் உமாராணி அசோக் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து திமுக எம்.பி ஆ.ராசா மீது புகார்கள் வருவதால், அந்த புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பி உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.