புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை, எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 76 விசைப் படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 196விசைப் படகுகளிலும் புதுக்கோட்டை மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தஆர்.செல்வகுமாருக்கு(47) சொந்தமான விசைப் படகில், அவருடன், எஸ்.விஜயபிரியன் (21),பி.காசிராஜா(68), வி.சேகர்(60) மற்றும் சிறுவன் என 5 பேரும்,இ.மணிகண்டனுக்குச் சொந்தமானவிசைப் படகில், அவருடன், வி.சுபாஷ்(26), ரகமத்துல்லா(38), எம்.திருமுருகன்(27) என 4 பேரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கலந்தர் நைனா முகமதுவுக்குச் சொந்தமான விசைப் படகில்என்.சந்திரசேகர்(42), எம்.கார்த்திக்(23), எம்.மணிகண்டன்(25), எம்.ஜெயக்குமார்(53) ஆகிய 4 பேரும் இருந்தனர். மொத்தம் 3 விசைப் படகுகளில், 13 பேர்நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு மீனவர்களை அழைத்துச் சென்று, அங்கு சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, சக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டு இதுவரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 252 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படையின் அதிகாரப்பூர்வஇணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகம் மூலம் நடவடிக்கை: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுஎழுதிய கடிதத்தில், புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் மீனவர்கள், வரலாறுகாணாதநெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். தற்போது 80 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். மேலும், 173 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன.
அவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை வலுவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தூதரகநடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார்.
கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர், தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.