சென்னை: கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2 வதுவெள்ளிக்கிழமையில் மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வுநடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், துறைஅலுவலர்களுக்கு பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும்குறைகளை பகிரவும், 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான செயல்முறை ஆணையை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள் ளார்.
அதில், 2 மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை பணியாளர் நாள் நிகழ்வைநடத்த வேண்டும். அந்த நாளில்நடத்த இயலாவிட்டால், அடுத்துவரும் வேலை நாளில் அக்கூட்டத்தினை நடத்த வேண்டும்.
பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாளர் நாள் நிகழ்வு செப். 13, நவ.8 மற்றும் அடுத்தாண்டு ஜன.10 மற்றும் மார்ச் 14-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என்ற அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சுழற்சி முறையில் கூட்டத்தை நடத்தவேண்டும். ஒரு மண்டலத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளும் போது, வேறு மண்டலத்துக்கு, மேற்படி பணியாளர் நாள் நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அல்லது பொது மேலாளர் அல்லது உதவி பொது மேலாளர் கலந்துகொள்ள வேண்டும்.
பணியாளர் குறைகள் தொடர்பாக பெறப்படும்மனுக்களை அதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவிட வேண்டும். இணையதளத்தில் பதிவிட முடியாத மனுக்களை பணியாளர் நிகழ்வின் போது அளிக்கலாம்.
விண்ணப்பங்கள் மீது 2 மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். நிராகரிக்கப்படும் மனுக்களுக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு பதில் அனுப்பி அதை இணையத்தில் பதிவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.