சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவம் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின், தம்பியான பொன்னை பாலு உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர்.
தனது அண்ணனான ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாகவே கூட்டாளிகளுடன் சேர்ந்தஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலமாக அளித்ததாக போலீஸார் கூறினர். கைது செய்யப்பட்ட அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலைக்கான உண்மையான காரணம், பின்னணி குறித்த முழு தகவல்களையும் சேகரிக்கும் வகையில் கைதான 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக இவர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் 11 பேருக்கும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தார்.
கேள்விகளுக்கு விடை கிடைக்கும்: முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் உள்ள 11 பேரும் எழும்பூர் நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை. மாறாக அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் காவலில் நடத்தப்படும் விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பண உதவி மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் மற்றும் இதன் பின்னிணியில் உள்ளவர்கள் யார் என அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்களை அழைத்து கொலையாளிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.