மதுரை அருகே கி.பி.18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!


மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி.18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளுடன் கூடிய நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி கிராமத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக அக்கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், ராஜபாண்டி, சுரேஷ், தடயவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆதிஷ், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

இதில், அக்கல்வெட்டு 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேசிய ஆய்வுக் குழுவினர், “இங்கு காணப்படும் நடுகல்லானது ஒன்றரை அடி உயரம், ஓரடி அகலமுடைய பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் 9 வரிகளை உடைய தமிழ் எழுத்துக்களும், மறுபுறம் ஒரு பெண்ணின் உருவம் புடைப்புச் சிற்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் கல்வெட்டில், ‘உன்னதமான மடத்தில் மாசி ராமர் பெண்டுகள் (பெண்கள்) குழுவில் இருந்த மக்கண்ண(ர)சி’ என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இது ஒரு பெண் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என்பதை அறிய முடிகிறது. மேலே உள்ள ஐந்து வரிகள் தவிர மற்ற வரிகள் முற்றிலுமாக சிதைந்துள்ளது.

நடுகல்லின் மறுபுறத்தில் ஒரு பெண்ணின் உருவம் நின்ற கோலத்தில் உள்ளது. இதில் பெண்ணின் தலைப்பகுதி இடதுபுறம் சரிந்த கொண்டை, காதுகளில் பத்திர குண்டலம், கழுத்தில் ஆபரணம் உள்ளது. மேலாடை இல்லாமல் கீழாடை மட்டும் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களில் வலது கரத்தில் தாமரை மலரை பிடித்தபடி உள்ளது.

கைகள், கால்களில் அணிகலன்களுடன் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சிற்பத்தை 'வள்ளியம்மன்' என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். மேலும், இந்நடுகல்லை வழிபடும் மாயாண்டி குடும்பத்தினர் கூறுகையில், "பொந்திக்கிழவி என்ற ஒரு பெண் தனது நான்கு மகன்களுடன் உழவு செய்தபோது ஏர்க்கலப்பையில் பட்டு நடுகல்லில் இருந்து ரத்தம் தெறித்தது.

அதனைப் பார்த்து பொந்திக்கிழவி அருள்வாக்கு கூறி வழிபடத் தொடங்கி தற்போது பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடி வருகிறோம்” என்றனர்.

x