அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் ஆர்வத்தை ஏற்படுத்த திட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி!


மதுரை: அரசுப்பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் பள்ளி மாணவர்களுக்கும் தொல்லியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தவும் தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த மன்றங்கள் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு கள்ளர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சொ.சாந்தலிங்கம், தொல்லியல் அகழாய்வு, நாணயவியல், கல்வெட்டியல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.

அதேபோல் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, மாணவர்களிடையே தொல்லியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றும் கற்பிக்க வேண்டிய தொல்லியல் நிகழ்வுகள் குறித்து பயிற்சி அளித்தார். பின்னர் களப்பயணமாக கொங்கர் புளியங்குளம் சமணமலைக்குகைக்கு சென்றனர். அக்குகையில் உள்ள 3 தமிழி கல்வெட்டுகளை படிக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்வி அலுவலர் சொ.சவகர், தலைமையாசிரியர் வ.கணபதி சுப்பிரமணியன் செய்திருந்தனர். இதில் 46 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

x