தமிழக எல்லையிலுள்ள புதுச்சேரி சாராயக்கடைகளில் எரிசாராயம் விற்பனை - டிஜிபியிடம் சுயேட்சை எம்எல்ஏ புகார்


புதுச்சேரி: தமிழக எல்லையோரம் உள்ள புதுச்சேரி சாராயக்கடைக்கு வருவோருக்கு சட்டவிரோதமாக எரிசாராயம் கலந்த சாராயம் விற்கப்படுவதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

புதுவையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்களுக்கு எதிராக, பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாஸ் அசோக், நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகிய 7 பேர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

ரங்கசாமி அரசு மீது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ரங்கசாமி தலைமையிலான அரசில் ஊழல், லஞ்சம் அதிகரித்துள்ளதுடன் புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இவர் உள்பட அதிருப்தியில் உள்ள 7 எம்எல்ஏ-க்களும் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவிடமும் புகார் தந்தனர்.

அதிருப்தி எம்எல்ஏ-க்களை சமரசம் செய்ய பாஜக தலைமை, மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை அனுப்பியது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் மேலிட பொறுப்பாளர் சுரானா கட்சி தலைமையை அணுகி ஆலோசனை பெற, அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் பத்து நாட்கள் அவகாசம் கேட்டு சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து முதல்வரை விமர்சித்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிருப்தி எம்எல்ஏ-க்கள் டிஜிபி அலுவலகத்தில் மனு தந்தனர். இதனிடையே புதுவை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கும்போது எதற்காக சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவு என என்.ஆர்.காங்கிரஸார் கேள்வி எழுப்பினர். சுயேட்சை எம்எல்ஏ-க்கள் தரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்து குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இருவர் தற்போதும் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளன் மீண்டும், ஒரு புகாரை அரசுக்கு எதிராகத் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக போலீஸ் டிஜிபி ஸ்ரீநிவாசிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘கடலூர், விழுப்புரம் எல்லையோரம் அமைந்துள்ள திருபுவனை தொகுதியில் தமிழக கூலி தொழிலாளர்கள் அதிகளவில் சாராயக் கடைக்கு வருகின்றனர். அவர்களுக்கு சட்ட விரோதமாக எரிசாராயம் கலந்த சாராயம் அதிகளவில் விற்கப்படுகிறது. சமீபத்தில்கூட விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரியிலிருந்து கொண்டுசென்ற சாராயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, எரிசாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, "புதுவை அரசின் கலால்துறை, முதல்வர் ரங்கசாமி வசம் உள்ளது. புதுவை அரசின் வடிசாலை மூலம் சாராயக் கடைகளுக்கு நேரடியாக சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விஷ சாராயம், கள்ளச் சாராயத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது புதுவை மீது குற்றம்சாட்டுவர்.

ஆனால் புதுவையைப் பொறுத்தவரை அரசின் சாராயமே விற்பனை செய்யப்படுவதால் கள்ளச்சாராயம் இங்கில்லை என்பார்கள். இத்தகைய சூழலில் புதுவையிலிருந்துதான் எரிசாராயம் தமிழக பகுதிக்கு விற்பனை செய்யப்படுவதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான அங்காளன் புகார் கூறியிருப்பது முதல்வர் மீதான நேரடியான தாக்குதலாகவே தெரிகிறது" என்றனர்.

x