கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தைத் தொடங்கி இருக்கிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. மக்களை ஓரணியில் திரட்ட அலையாய் அலைகிறார் ராகுல் காந்தி. ஆனால் அவரது கட்சியினரோ திசைக்கொரு பக்கமாக கட்சியை இழுக்கின்றனர்.
ஒட்டுமொத்த தமிழக காங்கிரஸே கன்னியாகுமரியில் முகாம் போட்டிருந்த நிலையில், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை ஓவர்டேக் செய்யுமளவுக்கு போனது கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணிதான். கன்னியாகுமரியில் பொதுக்கூட்ட மேடையே ஜோதிமணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ நிர்வாகிகள் தொடங்கி குமரி மாவட்ட இணைப்புப் போராட்டத் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா வரை அனைவரையும் ராகுல் காந்தியை சந்திக்க வைத்ததும் ஜோதிமணிதான்.
ஒரு கட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு செக் வைக்க தன்னாலான வேலைகளைச் செய்தார் ஜோதிமணி. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் ராகுலைச் சந்திக்க வந்திருந்தனர். ஆனால், ராகுல் இவர்களைச் சந்திக்காமல் கை மட்டும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இந்த விவசாயிகளை ராகுலைச் சந்திக்க நேரம் வாங்கித் தருவதாகச் சொல்லி குமரிக்கு வரவைத்தது கே எஸ் அழகிரி தான் . இந்த விஷயம் தெரிந்ததும் அதே நாளில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்க பிரநிதிகளை வரவைத்து ராகுலைச் சந்திக்க வைத்துவிட்டார் ஜோதிமணி. இதனால், இளங்கீரன் தலைமையில் வந்த விவசாயிகள் ராகுலைச் சந்திக்கமுடியாமல் சலிப்புடன் திரும்பிச் சென்றனர்.
முந்தைய காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்துவந்தவர்களில் முக்கியமானவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார். ஆனாலும், யாத்திரையைத் தொடங்கும் முன்பே டெல்லி சென்று ராகுலைச் சந்தித்தவர்கள் பட்டியலில் உதயகுமாரும் இடம்பிடித்தார். ராகுல் அழைப்பின் பேரில் டெல்லி வந்து சென்றவர்களுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து பயணச் செலவுக்குப் பணம் கொடுத்தார்களாம். அதை அன்போடு மறுத்துவிட்டாராம் உதயகுமார். இதில் நெகிழ்ந்து போன ராகுல், “கன்னியாகுமரி நடைபயணத்தில் நீங்களும் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம்.
அதை ஏற்றுக்கொண்ட உதயகுமார், “காங்கிரசின் பிரச்சினையே கோஷ்டி அரசியல்தான். என்னை தமிழக காங்கிரஸார் யாரும் அணுக வேண்டாம். தேவைப்பட்டால் நான் ஜெய்ராம் ரமேஷிடமே டீல் செய்து கொள்கிறேன்” என்று சொன்னதுடன், காங்கிரஸ் கோஷ்டி அரசியலை ஒழிக்க ஆக்கபூர்வமான யோசனைகளையும் சொன்னாராம்.
காங்கிரசுடன் உதயகுமார் இவ்வளவு தூரம் சமரசம் செய்துகொள்வதன் பின்னால் இன்னொரு அழுத்தமாக காரணமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். கோவளம் - மணக்குடி இடையே பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் பிரச்சினை அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங்கை கோவளம் கிராமத்திற்கே கூட்டிச்சென்று அதன் பாதிப்புகளை உணர்த்தினார் உதயகுமார்.
“நடை பயணத்தின் போது கூடங்குளம் பற்றி ராகுலிடம் பேசவே கூடாது. வேண்டுமானால் ஸ்டெர்லைட் பற்றி பேசுங்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் சொன்னார். அதனால் நான் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். மறுநாள் இவ்விஷயம் ராகுல் கவனத்திற்குப் போய், ‘எதைப்பற்றியும் பேசலாம்’ என அவர் சொன்னதன் பேரிலேயே மீண்டும் கலந்துகொண்டேன். தமிழக காங்கிரஸார் இப்படித்தான் மக்களுக்கும் ராகுலுக்கும் இடையில் இரும்பு வேலி போட்டு வைத்திருக்கிறார்கள்” என்கிறார் உதயகுமார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாள்கள் ராகுல் காந்தி நடைபயணம் செய்தார். இதற்கான செலவுகள் கன்னியாகுமரி எம்பி-யான விஜய் வசந்த் தலையில் கட்டப்பட்ட நிலையில், ராகுல் கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என போகிற போக்கில் சிலர் கொளுத்திப்போட்டிருக்கிறார்கள். இதுகூட விஜய் வசந்தை வளரவிடாமல் ஒடுக்கும் கோஷ்டி அரசியலின் ஒரு முகம் தான் என்கிறார்கள்.
எதிர்காலம் என்னாகுமோ என்று தெரியாத நிலையிலும் காங்கிரஸார் தங்களது கோஷ்டி அரசியலை இன்னமும் விட்டொழித்தபாடில்லை. இவர்களை வார்பிடிக்காமல் எத்தனை நடை பயணம் போய் என்ன பிரயோஜனம் மிஸ்டர் ராகுல் ஜி!