கடந்த காலங்களில் தென் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு யாத்திரைகள் அதன் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு வழி வகுத்தன. அதன் காரணமாகவே தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள 129 மக்களவை தொகுதிகளுக்கு குறி வைத்து தேசிய அளவில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி நடத்துவதாக கூறப்படுகிறது.
‘பாரத் ஜோடோ’ எனும் இந்தியாவை இணைக்கும் பாதயாத்திரை நடத்தி வருகிறார் ராகுல் காந்தி. 2 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 12 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரையில் 22 முக்கிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் அதிகமாக 9 கூட்டங்கள் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற உள்ளன. தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடந்து முடிந்துவிட்டது.
தென் மாநிலங்களில் மொத்தமுள்ள 129 மக்களவை தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. எனவே, தனக்கு ஆதரவு அதிகமுள்ள தென் மாநிலங்களில் காங்கிரஸ் தன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த விரும்புகிறது. இதன்மூலம், 2024 மக்களவை தேர்தலில் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்கும் கனவையும் கண்டு வருவதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், காங்கிரஸின் சிக்கலான காலங்களில் தென் மாநிலங்களே அக்கட்சிக்கு உதவிக்கரங்கள் நீட்டியிருந்தன. பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், அவரது மகனான சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோல்விற்ற காலகட்டத்தில் காங்கிரஸிடம் 153 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். இவற்றில் தென் மாநில உறுப்பினர்கள் எண்ணிக்கை 92 . பிறகு 1978 மக்களவை இடைத்தேர்தலில் சிக்மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்திக்கு வெற்றி கிடைத்தது. அடுத்து 1980-ல் வந்த மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அப்போது பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதியாக ஆந்திராவின் மேடக் இருந்தது.
இதற்கு முன்பும் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி பல்வேறு யாத்திரைகள் நடத்தி உள்ளார். உத்தர பிரதேசத்தின் பட்டா பர்ஸோலில் அவர் விவசாயிகள் யாத்திரை நடத்தினார். அடுத்து குஜராத்தில் சத்பவனா யாத்திரையும் நடத்தினார். இந்த யாத்திரைகளால் காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனினும், 2017-ல் குஜராத், 2019-ல் உபி ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்குகள் சதவீதம் அதிகரித்தன. அதேசமயம் குஜராத்தில் பாஜகவை 99 எம்எல்ஏக்களுடன் நிறுத்தவும் இந்த யாத்திரை உதவியது.
எனவே, இதுபோன்ற யாத்திரைகள் மற்ற அனைத்து கட்சிகளை விட தனக்கு ஒரு முக்கியப் பிரச்சார ஆயுதமாக காங்கிரஸ் கருதி வருகிறது. இருப்பினும், தனது யாத்திரைகள் தேர்தல் பிரச்சாரங்களுக்கானது அல்ல எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது உண்டு. தற்போதைய யாத்திரையும் அப்படியே கூறி, கட்சிக்கொடி அல்லாமல் தேசியக் கொடிகளை மட்டும் எடுத்துச் செல்கிறார்கள். தமிழகத்தில் திமுக, கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என கூட்டணி கட்சி ஆதரவு இருப்பினும் அவ்விரண்டு மாநிலங்களில் காங்கிரஸினரையே தட்டி எழுப்ப வேண்டிய நிலை கட்சிக்கு இருப்பதாகத் தெரிகிறது.
வெற்றிக்கான யாத்திரைகள்
ராகுல் நடத்துவது போன்ற யாத்திரைகள், தென் மாநிலங்களில் தேர்தலில் வெற்றிக்கானதாகக் கருதப்படுகிறது. தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ், 1982-ல் சைதன்ய ரத யாத்திரை நடத்தினார். அதன் மூலம் ஆந்திர மக்கள் ஆதரவைப் பெற்றவர் அடுத்த வந்த சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தார்.
2004-ல் ஆந்திராவில் பாதயாத்திரை நடத்திய காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைத்தார்.
இதேபோல அக்டோபர் 2, 2012-ல் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாஸ்துநாமி கோசம் (வருகிறேன் உங்களுக்காக) எனும் பாதயாத்திரை நடத்தினார். ஏப்ரல் 2013-ல் முடிந்த யாத்திரைக்குப் பின்பு 2014 சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது.
ஒய்.எஸ்.ஆர் மகனான ஜெகன்மோகன் ரெட்டியும் 2017-ல் பிரஜா சங்கல்ப யாத்திரை நடத்தினார். கடப்பா முதல் ஸ்ரீகாகுளம் வரையிலான இந்த பாதயாத்திரைக்கு பின் வந்த தேர்தலில் அவரது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு 25 மக்களவை தொகுதியில் 22 கிடைத்தன. தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவரது கட்சியே ஆட்சியும் அமைத்தது.
இந்த வரலாறை கணக்கிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுலும் ஒரு பாதயாத்திரை தொடங்கிவிட்டார். இது அவருக்கு 2024 மக்களவை தேர்தலில் பலன் அளிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. யாத்திரையின் பாதையில் பெரும்பாலான பகுதிகளில் பாஜக எதிர்ப்பு பலமாக இருப்பதும் தமக்கு சாதகமாக இருக்கும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.