தமிழகம் முழுவதும் 65 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 திருக்கோயில்களில் நாளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திருக்கோயில்களில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பணிகள் மேற்கொள்வது, குடமுழுக்கு, தேர் மற்றும் குளங்கள் புனரமைப்பு, கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், வழக்குகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 65 திருக்கோயில்களில் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’கடந்த 2021 முதல் தற்போது வரை 1,856 கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருச்சி பூர்த்திகோவில் திருமுத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள 7 கோயில்களும் அடங்கும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x