'தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது; வேதாளம் வந்திருப்பதே பேய் ஓட்டத்தான்’: ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி


சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேதாளம் என குறிப்பிட்ட நிலையில், அதற்கு பதிலடியாக 'வேதாளம் வந்திருப்பதே பேய் ஓட்டத்தான்' என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக – பாஜக இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. அக்கட்சிகளின் மாநில தலைவர்கள் ஒருவரையொருவர் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன், 314வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு இன்று காலை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது" என கிண்டலாக தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, வேதாளம் என ஜெயக்குமார் குறிப்பிட்டது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எழும்பூரில் அழகுமுத்துக்கோன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேதாளம் என குறிப்பிட்டதற்கு பதிலளித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “பல பேய்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த வேதாளம் வந்திருப்பதே பேயை ஓட்டுவதற்கு தான்.

ஒரு ஒரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஓரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது. இந்தப் பேய்கள் எல்லாம் தமிழக மக்களைப் பிடித்த பீடைகள். 70 ஆண்டுகளாக வளர்ச்சி இல்லை. அதே வறுமைக்கோடு. தமிழ்நாட்டில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லை. இதற்கு காரணம் இந்தப் பேய்கள் தான். எனவே, ஒரு ஒரு பேயாக இந்த வேதாளம் விரட்டும்" என்றார்.

x