வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு: சிரமத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் @ ராமேசுவரம்


ராமேசுவரம் சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்.

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலமான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, சிஎன்ஜி எரிவாயு (கம்ப்ரஸ்ட் நேச்சுரல் காஸ்) மூலம் இயங்கும் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், பழைய ஆட்டோக்களை குறிப்பிட்ட காலத்துக்குள் சிஎன்ஜி எரிவாயு ஆட்டோக்களாக மாற்றவும் அரசு உத்தரவிட்டது. அதனால் ராமேசுவரத்தில் ஓடும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிவாயுவால் இயங்கக் கூடியவையாக மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே ஒரேயொரு சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம் மட்டுமே உள்ளது. அதிலும் எரிவாயு விநியோகம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. எரிவாயு வந்ததும் ஆட்டோக்களும், சிஎன்ஜி வாகனங்களும் பல மணி நேரம் காத்திருந்து, எரிவாயு நிரப்பிச் செல்லும் நிலை உள்ளது.

சில நேரங்களில் வரிசையில் காத்திருந்து எரிவாயு கிடைக்காத நிலையில், 50 கி.மீ. தொலைவில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியிலுள்ள சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்துக்குச் சென்று எரிவாயு நிரப்பிச் செல்லும் நிலை உள்ளது. ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து எரிவாயு நிரப்பிச் சென்றன.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது: சுற்றுலாத்தலமான ராமேசுவரத்தில் தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நேரத்தில் எரிவாயு தட்டுப்பாட்டால் ஆட்டோக்களை வசதிக்கேற்ப இயக்க முடியவில்லை. எனவே, சிஎன்ஜி எரிவாயுவை எப்போதும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் ராமேசுவரத்துக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறுகையில், ராமேசுவரத்தில் சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாட்டால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சிஎன்ஜி எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.