திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தும் ஆசிரியர்களை விடுவிக்கக் கோரியும் அப்பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்போட்டை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவி, முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு, பாலியல் புகார் மனு ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த 1ம் தேதி இப்பள்ளியில் ஆய்வு செய்து, புகார் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணையும் நடத்தினார். அதைத் தொடர்ந்து, பள்ளியின் கணித ஆசிரியர் ஜெகதீசன், சமூக அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுலவர்கள் அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் அறிக்கை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான இரண்டு ஆசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம்குமார் ஆகியோர் மீது செவ்வாய்பேட்டை போலீஸார் நேற்று வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் செவ்வாய்பேட்டை அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு எதுவும் தரவில்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இப்போராட்டம் காரணமாக திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த செவ்வாப்பேட்டை போலீஸார், மாணவிகள், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.