சூறைக்காற்று: நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!



தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட, சுப்பம்மாள்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் கஜினி முகமது ( 55) . மீனவரான இவர் தனக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் காமராஜ் ( 30) என்பவருடன் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கடலுக்குள் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கஜினி முகமது சென்ற நாட்டுப் படகு சூறைக்காற்றின் வேகத்தால் கடலுக்குள் கவிழ்ந்தது. அதில் கஜினி முகமதுவும் காமராஜும் கடலுக்குள் தவறி விழுந்தனர். இதில் மீனவர் காமராஜ் மட்டும் நீந்திச் சென்று, அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் படகிற்கு சென்று சேர்ந்தார். அந்த மீனவர்கள் வந்து பார்த்தபோது கவிழ்ந்து கிடந்த படகில் கஜினி முகமதுவை காணவில்லை.

இது குறித்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத் துறை, கடலோர காவல் படை, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் இன்று காலை கடலுக்குள் சென்ற அதிகாரிகள் காணாமல் போன மீனவரைத் தேடினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீனவர் கஜினி முகமதுவின் உடல் மீட்கப்பட்டது. உடனடியாக அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், உடற்கூராய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலில் மூழ்கி பலியான கஜினி முகமதுவுக்கு பரிதா (45) என்ற மனைவியும், திருமணமான 3 மகள்களும் உள்ளனர். சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

x