பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகே ரயில்வேக்கு சொந்தமான பொது ஸ்டோரில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான மின்சார கேபிள்கள், மின் உபகரணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் நாசமாகின.
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் வழித்தடத்தில் பெரம்பூரில் லோகோ ஒர்க்ஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ஜெனரல் ஸ்டோர் உள்ளது. இந்த ஸ்டோரில் ரயில்வேக்கு சொந்தமான மின் கேபிள், மின் உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள் உள்பட பல்வேறு பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏலம் விடப்படும்.
இந்நிலையில், இந்த ஸ்டோரில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்த சில நிமிடங்களில் மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. பழையப் பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வியாசர்பாடி, பெரம்பூர், அம்பத்தூர் உள்பட 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள், மின்கேபிள்களை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் போராடி காலை 10.30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து, எரிந்து கிடைக்கும் பொருட்களில் மேலும் தீ பரவாமல் தடுக்க வெப்பத்தை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் கேபிள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து பெரம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.