அமைச்சுப் பணியாளர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை வழிமுறைகள் வெளியீடு!


பள்ளிக் கல்வி அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுவோரை மாவட்டத்துக்குள் இடமாறுதல் செய்வது தொடர்பாக சில நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் மற்றும் பொதுவான விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையில் ஜூன் 30-ம் தேதி அன்றைய நிலையில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்த ஏதுவாக அவர்களது விவரங்கள் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மாவட்டத்துக்குள் மாறுதல் சார்ந்து பின்வரும் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் கலந்தாய்வில் பங்கு பெறாத நிலையில் அவருக்கு வேறு ஒரு அலுவலகத்துக்கு நிர்வாக மாறுதல் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். எந்தவொரு பணியாளரும் ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.

அந்தப் பணியாளர்களுக்கு அவசியம் மாறுதல் அளிக்க வேண்டும். ஒரே அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யக் கூடாது. அதனை மாறுதலாக கருத இயலாது. மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அவர்களது பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட மாறுதல் சென்னை மாவட்டத்தைத் தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் பள்ளிக் கல்வி வளாக அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே அலகாக கருதப்படும். ஓராண்டுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களும் மாறுதல் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களுக்கான கலந்தாய்வுக்குப் பின்னர் ஓராண்டுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும் மனமொத்த மாறுதல் கோரும் பணியாளர்களின் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து ஆணை வழங்க வேண்டும். கலந்தாய்வில் முன்னுரிமை பின்பற்றப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x