மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு


சென்னை: மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய, சிறுவர்கள் இருவரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மெரினா கடற்கரையில் நேற்று காலை வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் நின்று அலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் இரு சிறுவர்களும் இறங்கி, கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்தது.

அந்த அலை சிறுவர்கள் இருவரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அச்சிறுவர்கள் உதவி கோரி கூச்சலிட்டனர். உடனே, கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் உதவி வேண்டி கூக்குரல் எழுப்பினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு தயாராக நின்று கொண்டிருந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த, மெரினா மீட்புக் குழுவினர், விரைந்து சென்று சிறுவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அந்த சிறுவர்கள் சோர்வாக இருந்ததாலும், அதிகளவில் கடல் நீரை குடித்திருந்ததாலும் உடனடியாக அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கடலில் தத்தளித்த இரு சிறுவர்களும் பேசின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பள்ளிக்கு செல்லாமல் மெரினா கடற்கரைக்கு வந்து குளித்தபோது அலையில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. துரிதமாகச் செயல்பட்டு சிறுவர்கள் இருவரை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினரை மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

x