நெல்லை, தென்காசியில் கனமழை: பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் வருகை


சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்துள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர். படம்: மு.லெட்சுமி அருண்.

தென்காசி/ திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரியில் 81 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 60 மி.மீ., கருப்பாநதி அணையில் 18.50, கடனாநதி அணையில் 16, சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது.

தொடர் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் குறை வான அளவில் தண்ணீர் விழுந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப் பட்டது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணையில் 52.40 மி.மீ. மழை பதிவானது. நம்பியாறு அணையில் 50 மி.மீ., கன்னடியன் அணையில் 41.60, மூலக்கரைப்பட்டியில் 28, களக்காட்டில் 22.60, அம்பா சமுத்திரத்தில் 17, பாபநாசத்தில் 15, மாஞ்சோலை, ஊத்து பகுதியில் தலா 9, சேரன்மகாதேவியில் 8.20, நாலுமுக்கு பகுதியில் 8, கொடுமுடியாறு அணையில் 5, நாங்குநேரியில் 3, பாளையங் கோட்டையில் 2, திருநெல்வேலியில் 1.60, சேர்வலாறு, காக்காச்சி பகுதியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

கனமழை எச்சரிக்கையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை, திருக் குறுங்குடி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பழைய குற்றாலம் அருவி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூந்தன்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் 1,200-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 90 பேர் திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களுடன் இவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

x