மருத்துவ கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: மருத்துவக்கல்வி வணிகமய மாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலே போதுமானது. மதிப்பெண் களைப் பற்றி கவலைப்படாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும். முன்கூட்டியேபதிவு செய்து முன் தொகை செலுத்துவோருக்கு ரூ.5 லட்சம் வரை கட்டண சலுகை வழங்கப்படும் என்றெல்லாம் சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லுமா என்பதே இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். தனியார் பல்கலைக்கழகங்களின் இத்தகைய செயல்பாடுகள் நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் நடைபெற்று வருகின்றன.

நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தாலும்கூட பணம் இல்லாதமாணவர்களால் தனியார் பல்கலை.களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரைகட்டணம் செலுத்தி சேர முடியாது. அதேநேரம் மதிப்பெண் குறைவாகஎடுத்திருந்தாலும் பணம் இருந்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியும். இது சமூக அநீதி ஆகும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலை.களில் மருத்துவ மாணவர் சேர்க்கைஇடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும்தான் நீட் தேர்வின் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தநோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

மருத்துவக் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x