பரிசுப்பொருட்கள் வேண்டாம்; முதல்வர் நிவாரண நிதி வழங்குங்கள்: இந்தியாவின் இளம் மேயரின் திருமண வேண்டுகோள்


மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இந்தியாவின் மிக இளவயது மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரள சட்டமன்ற உறுப்பினர் சச்சின் தேவ்க்கும் வரும் 4- ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி சென்டரில் வைத்து திருமணம் நடக்கிறது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்துக் கொண்டிருந்த இவரை திருவனந்தபுரம் மேயர் ஆக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மார்க்சிஸ்ட் கட்சி.

இந்தியாவிலேயே இளவயது மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரளத்தின் பாலிச்சேரி தொகுதியின் எம்எல்ஏ சச்சின் தேவ்க்கும் திருமணம் நடக்க உள்ளது. கேரள சட்டமன்றத்திலேயே மிகவும் இளையவரான சச்சின் தேவ்க்கு இப்போது 28 வயதே ஆகிறது. சட்டப்பட்டதாரியான சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநில செயலாளராகவும், தேசிய இணை செயலாளராகவும் உள்ளார். கோழிக்கோடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபோது கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவராகவும் இருந்தார்.

மேயர் ஆர்யா ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழந்தைகள் பிரிவான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இருவரும் ஒரே அரசியல் சிந்தாந்தம் கொண்டவர்கள் என்னும் அடிப்படையில் வாழ்க்கையில் இணைகிறார்கள். கடந்த ஆண்டே நிச்சயிக்கப்பட்ட இவர்களின் திருமணம், வரும் 4-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி சென்டரில் வைத்து நடக்கிறது.

இந்தத் திருமணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர், நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் மேயர் ஆர்யா ராஜேந்திரன், “காலை 11 மணிக்குத் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு வருபவர்கள் எந்தப் பரிசுபொருளையும் கொண்டுவர வேண்டாம். மாறாக, அவர்கள் திருமணப் பரிசாக கொடுக்க, பரிசுப்பொருள்கள் வாங்க விரும்பிய தொகையை முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் அல்லது முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்குங்கள் என தம்பதி சகிதம் கேட்டுக்கொள்கிறோம் ”எனத் தெரிவித்துள்ளார்.

x