நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை: தி.நகரில் 40 கடைகளுக்கு மாநகராட்சி சீல்


சென்னை: சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலானது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகமாகும்.

சிலர் ரூ.7 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதுபோன்ற நீண்டகால நிலுவை வைத்துள்ளோர் 100 பேரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை மாநகராட்சி https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.22 கோடியே 44 லட்சம் சொத்துவரி வசூலிக்க வேண்டியுள்ளது.

இப்பட்டியலை வெளியிட்ட பிறகு, 2 பேர் சொத்து வரியை முழுமையாகவும், 8 பேர் பகுதியாகவும் செலுத்தினர். மற்றவர்கள் செலுத்தவில்லை. இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல வருவாய்த் துறை அதிகாரிகள் சென்னை தியாகராய நகருக்கு சென்றனர்.

அங்கு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு பிரபல கடை (ரூ.37 லட்சம் நிலுவை), அதே தெருவில் உள்ள மற்றொரு கடை (ரூ.28 லட்சம் நிலுவை) மற்றும் டாக்டர் நாயர் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் சுமார் ரூ.90 லட்சம் நிலுவை வைத்துள்ள 38 கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``தற்போது சொத்துவரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் இனிமேலும் வரியை செலுத்தாமல் தாமதித்தால், நோட்டீஸ் வழங்கி, சொத்துகளுக்கு சீல் வைக்கப்படும. ஜப்தி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது தொடர்பான வலுவான விதிகள், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் நிலுவை வைத்திருப்போர் காலத்தோடு சொத்து வரியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்'' என்றனர்.

x