முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அச்ச வளையத்திலேயே வைத்திருக்கிறதாம். இதனால், சொந்த மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக்கூட கண்டும் காணாது இருக்கிறாராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை அண்மையில் காணொலி வழியாகத் தொடங்கி வைத்தார் முதல்வர். இந்த நிகழ்வில் அனிதாவைக் காணவில்லை. அதேபோல் இன்று (செப்டம்பர் 1), அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதிலும் அனிதா ஆப்சென்ட். ஆதரவாளர்களைக் கேட்டால், “அண்ணாச்சிக்கு உடம்புக்கு சொகமில்லை... அதனால் வரமுடியாமப் போச்சு” என்கிறார்கள். இதனிடையே, “அமலாக்கத் துறை விசாரணைக்குப் பயந்து பாஜகவுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார் அனிதா. அதனால் தான் இத்தனை சைலன்டா இருக்கார். இது தலைமைக்குத் தெரியும். அவங்களும் இவரு மேல அதிப்தியிலதான் இருக்காங்க” என்று கொளுத்திப்போட்டு குளிர்காய்கிறது அனிதாவின் எதிர்கோஷ்டி!