கோவையில் 278 பானிபூரி கடைகளில் அதிரடி ஆய்வு - 57 கடைகளுக்கு நோட்டீஸ்


கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள பானிபூரி தயாரிக்கும் இடத்தில்  ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள். 

கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோவையில் இயங்கி வரும் பானிபூரி விற்பனைக் கடைகள் மற்றும் தயாரிக்கும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 10) ஆவாரம்பாளையத்தில் இயங்கி வரும் பானிபூரி தயாரிக்கும் இடம், விற்பனை இடங்களில் நேற்று களஆய்வு நடத்தினர். அதில், மேற்கண்ட இடத்தில் சுகாதாரமின்றி தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் பானிபூரிகள், அழுகிய நிலையில் இருந்த 12 கிலோ உருளைக்கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.23 ஆயிரம் ஆகும்.

மேலும், இங்கு பானிபூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் 5 மூலப்பொருட்களை உணவு மாதிரிகளாக எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவுபாதுகாப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘இத்தொடர் களஆய்வில் 278 கடைகளை ஆய்வு செய்ததில், 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 15 உணவு மாதிரிகளும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்தியதற்காக 23 கடைகளுக்கு அபராதமாக ரூ.46 ஆயிரமும் விதிக்கப்பட்டுள்ளது.

பானிபூரி தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 223 சில்லறை விற்பனையாளர்கள், 9 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 98.5 லிட்டர் பானி, 62 கிலோ பூரி மற்றும் தரமற்ற காளான் 34.5 கிலோ, 88.5 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, 12 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சில்லி சிக்கன், தரமற்ற நூடுல்ஸ், புரோட்டா என 55.45 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் மேலங்கி, தலைக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும். விற்பனை செய்பவர்களும் தலைக்கவசம், முகக்கவசம், மேலங்கி அணிந்து விற்க வேண்டும்.

பானிபூரி தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமாக, சுத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் இருப்பு வைத்துள்ள நீரை பயன்படுத்தக்கூடாது. காய்கறிகள் தரமானதை பயன்படுத்த வேண்டும்" என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

x