மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் - மக்கள் அவதி


மதுரை: மதுரை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் போதுமான தகுதியான ஊழியர்கள் இல்லாததால் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவது தாமதமாகி, பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 1937 ஆண்டு முதல் 2000 ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்புகளை 20 நாட்களில் பதிவு செய்தால் இலவசமாக மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் அதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். 20 நாட்களுக்கும் மேல் பதிவு செய்யாமல் தாமதம் செய்தால் ரூ.200 அபராதம் செலுத்தி மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து அந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

அதுபோல், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களில் பெயர் திருத்தம், நீக்கம் செய்து திருத்தம் செய்வதற்கும் மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த சான்றிதழ்களை வழங்குவதற்காகவே மாநகராட்சி மைய அலுவலகத்தின் தரைத்தளதில் மைய பிறப்பு, இறப்பு பதிவேடுகள் வைப்பறை பிரிவு அலுவலகம் செயல்படுகிறது.

மாநகராட்சி நுழைவு வாயிலில் உள்ள தகவல் மையத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் மற்றும் திருத்தம், நீக்கம் கோரும் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று நிரப்பி அதற்கான தகுதியான சான்றிதழ்களை இணைத்துக் கொடுத்தால் 10 நாட்களில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆனால், முறையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தாலும், உடனுக்குடன் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்றும், மிகுந்த தாமதம் ஆவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மைய பிறப்பு, இறப்புப் பதிவேடுகள் வைப்பறை பிரிவு அலுவலகத்தில் இப்பணிகளை பார்ப்பதற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் தலைமையில் 2 இளநிலை உதவியாளர்கள் உள்பட 10 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், சமீபத்தில் 2 பேர் ஒய்வு பெற்றதால் 8 பேர் மட்டுமே பணிபுகிறார்கள். அவர்களிலும் 5 பேர் இந்த அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான கல்வி திறன் இல்லாதவர்கள். வாரிசு அடிப்படையில் வேலைக்கு வந்தவர்கள். அவர்களால் திறம்படவும், துரிதமாகவும் செயல்பட்டு பொதுமக்களுக்கு உடனுக்குடன் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை வழங்க முடியவில்லை.

இந்த அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர், பொதுமக்கள் விண்ணப்பங்களையும், ஆவணங்களையும் சரிப்பார்த்து, இரண்டாவது தளத்தில் உள்ள மாநகராட்சி நகர் அலுவலர் அலுவலகத்தில் உள்ள புள்ளியியல் அதிகாரியின் (Statistical Officer) பார்வைக்கு அனுப்ப வேண்டும். அவர் அதனை சரிப்பார்த்து, நகர் அலுவலகர் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், வருவாய் வரக்கூடிய பணிகளில் செலுத்தும் ஆர்வத்தை, அடிப்படை அத்தியாவசிய பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதிலும் செலுத்தினால் நலமாக இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''அவசர தேவைக்காகத் தான் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பம் செய்கிறோம். ஆனால், அந்த அவசரத்தை புரிந்து கொள்ளாமல், மாநகராட்சி ஊழியர்கள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் அலட்சியம் காட்டுகிறார்கள். சில நேரங்களில் விண்ணப்பித்த விண்ணப்பங்களையே காணாவில்லை என தேடுகிறார்கள். விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லி சமாளிக்கிறார்கள். பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை தவிர மற்றவர்கள் செல்லக்கூடாது. ஆனால், யார் வேண்டுமென்றாலும் உள்ளே சென்று வருகிறார்கள்.

விண்ணப்பங்களை பெறுவதற்கு வருடங்கள் வாரியாக 3 கவுன்ட்டர்கள் உள்ளது. ஆனால், அந்தக் கவுன்ட்டரில் விண்ணப்பங்களை பெறுவதற்கு, விண்ணப்பிக்க வருவோருக்கு வழிகாட்டுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஆட்கள் இருப்பதில்லை. நேரடியாக அலுவலகத்திற்குள் சென்று சொன்ன பிறகே விண்ணப்பித்தைப் பெறுகிறார்கள். பெறப்படும் விண்ணப்பத்தை உடனடியாக ஆய்வு செய்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்புவதும் இல்லை. இதனால் பிறப்பு, இறப்பு திருத்தம் சான்றிதழ் பெற முடியாமல் தினமும் ஏராளமான பொதுமக்கள், அந்த அலுவலகம் அருகே குழந்தைகளுடன் வந்து காத்து கிடக்கிறார்கள்'' என்றனர்.

போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படுமா? இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ''ஒரு நாளைக்கு 30 விண்ணப்பங்கள் திருத்தம் கோரி வருகிறது. அவற்றில் சரியான ஆவணங்கள் இணைக்காதது, தவறான முகவரி உள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே விசாரணை செய்து சான்றிதழ் வழங்குவது தாமதமாகிறது. மேலும், முறையான ஆவணங்களை இணைக்காதவர்களுக்கு விசாரணைக்கு வரும்படி கடிதம் மூலம் தகவல் தெரியப்படுத்துகிறோம்.

ஆனால், சிலநேரங்களில் முகவரி தவறாக கொடுக்கும்போது இந்த தகவலும் விண்ணப்பித்தவர்களுக்கு சரியாக சென்றடைவதில்லை. மேலும், இந்தப் பணிகள் தவிர, ஆர்டிஐ கேள்விகளுக்கு பதில் அனுப்புவது, நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவது மற்றும் அதற்கான விளக்கங்கள் அளிப்பது, தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு சான்றிதழ் திருத்தம் செய்வது, பாஸ்போர்ட், லஞ்ச ஒப்பு போலீஸார், போக்சோ வழக்குகள், நில அபகரிப்பு பிரிவு அலுவலகங்களில் வரும் உண்மைத்தன்மை கண்டறியும் (பிறப்பு, இறப்பு சரிப்பார்த்தல்) பணிகளையும் பார்க்கிறோம். அப்படியிருந்தும் சான்றிதழ் வழங்கும் பணிகளை தாமதமானாலும் தவறில்லாமல் செய்து வருகிறோம்'' என்றனர்.

x