கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டம் மேற்படிப்பு மற்றும் முனைவர் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக கிளைகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 11 உறுப்பு கல்லூரிகளின் வாயிலாக இந்த படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 33 துறைகளில் முதுநிலை படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் பெறப்பட்டு, அதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 23ம் தேதி நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வில் 2,881 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. தமிழ்நாடு மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் வேளாண்மை இளநிலை படிப்பை பயின்று வரும் மாணவர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். இவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மேல்படிப்பு படிப்பதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று காலை மின்னஞ்சல் வாயிலாக இந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தகவல் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களிடையே பெரும் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. ’இந்த நுழைவுத் தேர்வில் விண்ணப்பித்த பிற மாநில மாணவர்கள், இளநிலை படிப்பை முடிப்பதில் வெவ்வேறு நிலைகளில் உள்ளனர். இதனால் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அவர்கள் முடிக்க இயலும். அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, நடப்பாண்டில் மே மாதம் துவங்கப்பட்ட முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.