கோவில்பட்டி: கண்களில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்!


கோவில்பட்டி: 2023-24-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்துப் பயிர்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து, 2023-24-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் இன்று காலை தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடந்தது.

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கிய மனுவில்,'தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத பெருமழையால் பயிர் செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து, பாசி, வெள்ளைச்சோளம், மிளகாய், கொத்தமல்லி மற்றும் நவதானிய பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்தன.

பயிர்கள் பாதிப்பு குறித்து புள்ளியல், வேளாண் மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.,ஆனால் இதுவரை, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் உழவு செய்ய முடியாமலும், விதை வித்துக்கள், உரம் மற்றும் பயிர் தொழிலுக்கு தேவையான இடுப்பொருட்கள் வாங்க முடியாமலும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் விவசாய நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் விவசாய பணிகள் செய்யவும், சென்ற ஆண்டுக்கு உரிய நஷ்டத்தை ஈடு செய்யவும் ஏதுவாக 2023-24-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம், காப்பீடு நிறுவனங்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

x