பழங்குடியினப் பெண் தலைவர் மீது சாதிய வன்மம்?


நெல்லியாளம் நகராட்சிப் பழங்குடியினத் தலைவர் மீது சாதிய வன்மத் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் தலைவர் பதவி பழங்குடியினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் பழங்குடியினப் பெண்ணுக்குத் தலைவர் பதவி ஒதுக்கியது நெல்லியாளம் நகராட்சி மட்டும்தான்.

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 13-ல் திமுகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக தலா 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சுயேட்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுகவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணான 3-வது வார்டு உறுப்பினர் சிவகாமி போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பதவியேற்றது முதலே கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுலர்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த சுதந்திர தினத்தன்று கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தலைவரை ஒதுக்கிவிட்டு நகராட்சி அலுவலகத்தில் விழா நடத்தியுள்ளனர்.

தலைவர் சிவகாமி கவுன்சிலர்கள் ஒதுக்கிவரும் நிலையில், நகரட்சி அலுவலர்கள் அவரை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இவரிகளிடையேயான பனிப்போர் புகைச்சலாக இருந்துவந்த நிலையில், ஒப்பந்தப் பணி ஒதுக்கீட்டின்போது பெரியளவில் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று சில கவுன்சிலர்கள் தலைவரை வலியுறுத்தியுள்ளனர். இதற்கு தலைவர் சிவகாமி உடன்படாததால், தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 11-ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் விடும் நடவடிக்கை நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த கவுன்சிலர்கள் தலைவரிடம் பணிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மிரட்டி உள்ளனர். இதற்கு தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அதிமுக கவுன்சிலர் தலைவரை சாதிப் பெயர் குறிப்பிட்டு திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து தலைவர் சிவகாமி தேவாலா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகார் மீது இது வரை நடவடிக்கை இல்லாததால், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறையிட சிவகாமி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து சிவகாமி கூறும்போது, "நெல்லியாளம் நகராட்சியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான் திமுக சார்பில் வெற்றி பெற்று தலைவராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த 11-ம் தேதி நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளின் ஒப்பந்தம் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். அப்போது என் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒப்பந்தக்காரர் நசுருதீன் மற்றும் அவரது சகோதரர் ஐந்தாம் வார்டு உறுப்பினர் ஜாபீர் மற்றும் சுஹைப் ஆகியோர், நாங்கள் சொல்பவர்களுக்குத் தான் டெண்டர் வழங்க வேண்டும் என மிரட்டினர்.

இதற்கு நான் உடன்படாததால் என்னைப் பார்த்து உங்களை எல்லாம் சாதி அடிமையாக தானே வைத்திருந்தோம். பதவி வந்ததும் ஆட்டம் போடுகிறாயா? உன்னை வெட்டிச் சாய்த்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், எங்கள் சாதிப் பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இந்த மூவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேவாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். புகார் மீது சிஎஸ்ஆர் மட்டுமே கொடுத்தனர். ஆனால், புகார் மீது இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இதனால் கடந்த 25-ம் தேதி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இதற்கும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இது குறித்து முறையிடுவேன்” என்றார்.

மேலும், “கவுன்சிலர்கள் தங்களின் கைப்பாவையாக நான் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால், நான் மக்களின் நலனுக்காகவே பாடுபடுவேன். பழங்குடியினப் பெண்ணான எனக்கு மக்களுக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பு. இதை சிலரின் சுயநலத்துக்காகப் பயன்படுத்த மாட்டேன்” என்று சிவகாமி கூறினார்.

புகார் குறித்து தேவாலா டிஎஸ்பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “நெல்லியாளம் நகராட்சித் தலைவர் தேவாலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மீது விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்ததும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

x