மதுரை திருமங்கலம் வழியாக திண்டுக்கல்-கன்னியாகுமரி செல்லும் 4 வழிச் சாலையில் கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைக்கு புறம்பாக திருமங்கலம் நகராட்சி எல்லை மற்றும் கப்பலூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தக் கோரி தொடர்ந்து நிர்வாகம் வலியுறுத்தி வந்ததால், தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து அவ்வப்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக கூறி ஐம்பதாயிரம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது என சுங்கச்சாவடி நிர்வாகம் திடீரென அறிவித்தது. மேலும் தற்போது உள்ள வாகன கட்டணத்தில் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் இன்று கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகேந்திரன், சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து ஆர்.பி.உதயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அதிமுகவினர் ஆர்.பி.உதயகுமாரை விடுவிக்கக் கோரி முற்றுகை போராட்டத்தை தொடர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.