பட்டாசு தொழிலாளர்களின் உயிரைக் காத்திட தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் - காமராஜர் மக்கள் கட்சி


பட்டாசு தொழிலாளர்கள் | மாதிரிப்படம்

சென்னை: வறுமையின் காரணமாக உயிரைப் பணயம் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிரைக் காத்திட தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் பா குமரய்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகளினால் ஏழை, எளிய தொழிலாளர்களின் உயிர் இழப்பு தொடர்கதை ஆகிவிட்டது. சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் நேற்று நடந்த விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளன, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்துள்ளன.

காவல்துறை அண்மையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் "விருதுநகர் மாவட்டத்தில் 2019 - 24 காலகட்டத்தில் 82 பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்துள்ளன. 2010 - 20 காலகட்டத்தில் தமிழகத்தில் 120 பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடந்ததில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 128 விபத்துகளில் 262 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்ததும், " இழப்பீடு தருகிறோம், பட்டாசு ஆலை அதிபர்கள் முறைப்படி உரிமம் பெறவில்லை, விபத்தை தடுக்க ஆலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கிறோம், விரிவான விசாரணை நடத்துகிறோம்" என்று கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அரசு அறிவிப்பது போல், இவையும் வாடிக்கையான சடங்கு சம்பிரதாயங்களாக மாறிவிட்டன.

விபத்துகளுக்காக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் அரசு, விதி மீறல்களை கவனிக்காதிருந்த, துணை நின்ற அரசு அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடமையை செய்யத் தவறும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறுமையின் காரணமாக உயிரைப் பணயம் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிரைக் காத்திட தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். இது போன்ற பட்டாசு ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஆபத்து கால மருத்துவமனை மையங்களை ஏற்படுத்தினால், உயிரிழப்புகளைத் தடுத்திட வாய்ப்பாக இருக்கும் என்று காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

x