சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண் உட்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர். ஆலையின் ஃபோர்மேன், மேலாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி சோலை காலனியைச் சேர்ந்த முருகவேல்(58), எம்.புதுப்பட்டி அருகேயுள்ள காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை நடத்திவருகிறார். இங்கு 107 அறைகளில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை117 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாசுகளுக்கு வெடி மருந்துகளைச் செலுத்தும் அறையில், எதிர்பாராத விதமாகவெடி விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நேரிட்ட அறையில் இருந்தஆமத்தூர் சிதம்பராபுரம் மாரியப்பன்(47), முத்துமுருகன் (45) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சித்தமநாயக்கன்பட்டி சரோஜா( 55), செவலூர் சங்கரவேல்(54) ஆகியோர் பலத்த காயமடைந்து, விருதுநகர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த சார் ஆட்சியர் பிரியா, காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர், விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்,சார் ஆட்சியர் பிரியா கூறும்போது, “பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள்தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆலையின் ஃபோர்மேன் குணசேகரன், மேலாளர் பன்னீர் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், பட்டாசு ஆலையின் உரிமத்தை, அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சிவகாசி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தசெய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். காயமடைந்தோருக்கு சிறப்புசிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.