கும்மிடிப்பூண்டியில் இளைஞர் தற்கொலை: ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் பட்டா கோரி 3-வது நாளாக உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு


ராஜ்குமார்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவர் தன் தாய் கல்யாணியுடன் பல ஆண்டுகளாக வசித்து வந்த குடிசை வீடு இருந்த இடம் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை வகையை சேர்ந்தது என, வருவாய்த் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ராஜ்குமாரின் குடிசை வீட்டை அகற்ற வருவாய்த் துறையினர் வந்தபோது ராஜ்குமார் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 85 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் கடந்த 7-ம் தேதி அதிகாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, ராஜ்குமார்வீட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 4-ம் தேதியே பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்த இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி,எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழிகிராம நிர்வாக அலுவலர் பாக்யஷர்மா ஆகிய 3 பேரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பணியிடமாற்றம் செய்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில், ராஜ்குமாரின் குடும்பத்துக்கு அரசு உரியஇழப்பீடு வழங்க வேண்டும்,ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வேண்டும், ராஜ்குமாரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜ்குமாரின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் 3-வது நாளாக மறுத்து வருகின்றனர்.

மேலும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மதியம்ராஜ்குமாரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அதில், நிவாரணமாக ரூ.50 ஆயிரம், வேறு இடத்தில் இலவசவீட்டுமனை, ராஜ்குமாரின் மனைவிக்கு தற்காலிக பணிவழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனை ஏற்க மறுத்துள்ள ராஜ்குமாரின் தாய் உள்ளிட்டகுடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ராஜ்குமாரின் உடலைவாங்க மாட்டோம்’’ என தெரிவித்தனர்.

x