செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? - செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பகிரங்க சவால்


சென்னை: காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா என கேள்வியெழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாகக்கூறி என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவிட்டால், அவர் மீது அவதூறு வழக்கும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும்வழக்கு தொடரப்படும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மிகவும்வருத்தப்பட்டிருக்கிறார். மகாத்மாகாந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி, சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (வ.எண்: 24(A)/2001), இபிகோ 307 – கொலைமுயற்சி (வ.எண்:136/2003), தாக்குதல் (வ.எண்: 138/2003), கொலை மிரட்டல் (வ.எண்: 277/03), இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல் (வ.எண்: 451/2003). இறுதியாக குறிப்பிட்ட வழக்கில் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை முயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான்.

குறிப்பாக, மூன்று கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு, குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா, இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும், வாழும் மகாத்மா என்றா?

அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

அவர், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர், எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்

x