ரவுடிகள் பட்டியலில் பெயர் இருப்பதாக கூறுவதா? - அண்ணாமலை மீது வழக்கு பாயும் என செல்வப்பெருந்தகை எச்சரிக்கை


சென்னை: குற்றப்பதிவேடு மற்றும் ரவுடிகள்பட்டியலில் எனது பெயர் இருப்பதாக அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்என தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தவறினால் அவதூறு, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும்தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா, காந்தியைக் கொலை செய்தீர்கள். இப்போது எங்கள் நடத்தையை களங்கப்படுத்துகிறீர்கள். வாய்க்கு வந்தால் எல்லாம் பேசுவீர்களா?

எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துவிட்டு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசலாமா. தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறைஅறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1,977 வழக்குகள் உள்ளன.

என்னை ரவுடி என கூறும் அண்ணாமலை எந்த காவல் நிலையத்தில் என் மீது வழக்கு உள்ளது என நிரூபிக்க முடியுமா, என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்பு கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும். அதன்பின்னர் முன்ஜாமீனில் கூட வெளிவர முடியாது.

அண்ணாமலை மன்னிப்பு கேட்கும் வரை இந்த விவகாரத்தை விடமாட்டோம். மாநிலத் தலைவர் இப்படி அவதூறகப் பேசியதை அகில இந்திய அளவில் மக்களிடம் கொண்டு செல்வோம். அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்

x