மாஸ்கோவில் மோடி முதல் பா.ரஞ்சித் Vs திமுக வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி பேச்சு: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புதினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.

ரஷ்ய அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பரஸ்பரம் தங்களது நட்பினை வெளிப்படுத்தினார். அப்போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், இதனை மேற்கோள்காட்டி, உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகில் கொடுங்கோன்மை செயல்களை செய்யும் குற்றவாளி ஒருவரை மாஸ்கோவில் கட்டி அணைப்பதை பார்க்கும் போது அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது” என வேதனை தெரிவித்தார்.

“இந்தியாவின் எழுச்சியை உலகம் கவனிக்கிறது” - ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, “நிர்ணயிக்கும் இலக்கை அடைவதை உறுதி செய்கிறது இன்றைய இந்தியா. உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை கொண்டு சென்ற நாடு இன்றைய இந்தியா. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை உலகுக்கு உணர்த்தியது இந்தியா. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் அமைப்பைக் கொண்ட நாடு இன்றைய இந்தியா.

2014-ல் முதன்முறையாக நாட்டுக்கு சேவை செய்ய நீங்கள் எனக்கு வாய்ப்பு தந்தீர்கள். அப்போது நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் இருந்தன. இன்று லட்சக்கணக்கான ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இப்படி பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இன்றைய இந்தியாவின் எழுச்சியை உலகமே கூர்ந்து கவனிக்கிறது” என்று பேசினார்.

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு ஐஜி அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு: விக்கிரவாண்டி தொகுதியில் புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பாதுக்காப்புக்காக வடக்கு மண்டல ஐஜி-யான நரேந்திர நாயர் மேற்பார்வையில் டிஐஜி-யான திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்பி-க்கள், 900 சிறப்புக் காவல் படை போலீஸார், 220 துணை ராணுவத்தினர் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இருவர் பலி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளையார்குறிச்சியில் நாக்பூர் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை பட்டாசுகளுக்கு வெடி மருந்துகளை செலுத்தும் கோட்டைச்சுவர் அறையில் மருந்து தவறி விழுந்ததில், உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆமத்தூர் அருகே சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலியான இருவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை சொகுசு கார் விபத்துக்கு காரணமானவர் கைது: மும்பையின் வோர்லி பகுதியில் ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா என்ற இளைஞர் 72 மணி நேரத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். புனே போர்ஷே கார் விபத்து போல மும்பை நகரிலும் கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

“தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - இபிஎஸ்: "திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை: “குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்: படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம், "இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் Vs திமுக: இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் - ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம்” என்று குறிப்பிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

“திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?” என்பன உள்ளிட்ட கேள்விகளை பா.ரஞ்சித் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை சில விஷயங்களை முன்வைத்துள்ளார். அதில்,
“இந்த வழக்கில் விசாரண முடியவில்லை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, அதற்குள் போலீஸார் கொலைக்கு இதுதான் காரணம் என முடிவு செய்துவிட்டார்களா என எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புகிறீர்கள்? விசாரணையின் போக்கை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்லக் கூடாது என்ற அடிப்படை தெரியாதவரா தாங்கள்?” என்று பா.ரஞ்சித்துக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்துக்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே, அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா?” என்றும் திமுக தரப்பில் இருந்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் கம்பீர் உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமகால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகிலிருந்து பார்த்துள்ளார்.

தனது கரியர் முழுவதும் நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர் என்பதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன். இந்திய அணி குறித்த அவரின் தெளிவான பார்வையும், பரந்த அனுபவமும் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்துள்ளது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

x