சேலம்: மலிவாக கிடைக்கும் கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்டு, தமிழகத்தில் கள் இறக்கி விற்பனை செய்திட அனுமதிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள், தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு அனுமதிக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
மனு குறித்து பேசிய விவசாயிகள் சங்கத்தினர்கள் கூறியதாவது, "தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள் இறக்கிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 120 நாடுகளில் கற் விற்பனைக்கு தடையில்லை. கள் ஓர் உணவுப் பொருள், மருத்துவ குணமும் கொண்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகவும் கள் இருக்கிறது.
தமிழகத்தில் கள் இறக்கிட தடை இருப்பதால் பனை மற்றும் தென்னை விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படவும், மலிவாக கிடைக்கும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், மாற்று வழியாக கள் இறக்கிட, அனுமதிக்க வேண்டும்.
இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, கள் இறக்கி, விற்பனை செய்திட தமிழக முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பனைத் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து, மனு அளித்துள்ளோம்” என்றனர்.