மதுரையில் பைக் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை: மாநகர காவல்துறை எச்சரிக்கை


மதுரை: சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பலாம் என்றும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரையில் நத்தம் மேம்பாலம் மற்றும் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுபவர்களால் சாலைகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது.

எனவே, வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாநகரில் முக்கிய சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன சாகசத்தில் (Bike Racing, Rash Driving, Wheeling) ஈடுபடுபவரை கண்டால் அந்த இருசக்கர வாகனத்தை, வாகன எண்ணுடன் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் தகவல் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

x