நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 180 போலீஸார் பணியிட மாற்றம்!


நாமக்கல்: ஒரே நாளில் 33 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 180 போலீஸாரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் என 4 காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட மொத்தம் 33 காவல் நிலையங்கள் உள்ளன.

இவற்றில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்கள், போலீஸ் ஏட்டு, கான்ஸ்டபிள்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஸ்டேஷனில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் 33 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 18 பெண் போலீஸார் என மொத்தம் 180 பேர் மேற்குறிப்பிட்ட காவல் நிலையங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர்.

அவர்கள் அனைவரையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் இன்று ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம் என மாவட்ட காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு, சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் பிரமுகர்கள் கொலை என மாநிலம் முழுவதும் பரபரப்பாக உள்ள நிலையில் ஒரே நாளில் 180 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x