விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரம்


விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக எம்எல்ஏ உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலை அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தற்போதைய நிலையில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், விவிபாட் கருவி), தேர்தல் பொருட்களான வாக்கு மறைவு அட்டைகள், உலோக முத்திரைகள், பாலித்தீன் உறை, வாக்குப்பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் முத்திரைத் தாள், வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியா மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பொருட்களானது 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 276 வாக்குச் சாவடி மையங்களுக்கு 46 வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இப்பொருட்கள் மாலை 5 மணிக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.பழனி, விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

x