திமுக அரசு மிகப்பெரிய வஞ்சகத்தை செய்திருக்கிறது: ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு


பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில், திமுக அரசு மிகப்பெரிய வஞ்சகத்தை செய்திருக்கிறது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் சரணடைந்த 8 பேர் உள்பட மொத்தம் 11 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பட்டியலின தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அச்சமூகத்தினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளர்கள், பட்டியல் சமூக கட்சிகள், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் கொலையின் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், உடல் அடக்கம் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதைத் தொடர்ந்து, இதற்கான அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, உயர்நீதிமன்றத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய முடிவு எடப்பட்டது.

இச்சூழலில், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செம்பியம் காவல் நிலையம் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை வைத்து கொலையாளிகளுக்கு தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க விவகாரத்தில் திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அவர் வாழ்ந்த பெரம்பூரில் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு.

உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும் ஆம்ஸ்ட்ராங் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் தனது பதிவில் இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்துள்ளார்.

இதனிடையே பா.ரஞ்சித்தின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பல்வேறு பதில்களை தெரிவித்து வருகின்றனர்.

x