காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கு மாறிவிடாது: இபிஎஸ் விமர்சனம்


சேலம்: காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மாறிவிடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தை அடுத்த ஓமலூரில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக- வைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண் டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், சட்டம், ஒழுங்கு சீராகிவிடாது. காவல்துறைக்கு பொறுப்பு வகிப்பவர் தமிழக முதல்வர். அவர் திறமையாக செயல்பட்டால்தான், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க முடியும்.

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. போதைபொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது. காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலதலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. திட்டமிட்டுஅந்த கொலையை அரங்கேற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. சரணடைந்துள்ளனர். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என அவர்களது குடும்பத்தினரும், கட்சியினரும், அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் தெரிவித்துள்ளனர். அவர்களின் சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை.

திமுக-வில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அதை மறைப்பதற்காக, அதிமுக-வினரை பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன. ஜெயலலிதா இருந்தபோதுகூட, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை. கட்சியினரை தாக்கவில்லை. கட்சிப் பொருளை திருடவில்லை. ஆனால் இப்போது நடந் திருப்பது வேறு.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அணைமேடு பாலம் திட்டம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உட்பட அதிமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

x