ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தமிழக பாஜக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்திக்க திட்டம்: அண்ணாமலை தகவல்


படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை.

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 5-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டுக்குசென்று குடும்பத்தினரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. ஜூலை 9-ம் தேதி (இன்று) பாஜக மூத்த தலைவர்கள் எல்.முருகன், வி.பி.துரைசாமி, பொன்.பாலகணபதி, குழந்தைவேலு, கார்த்தியாயினி உள்ளிட்ட 5 பேர் டெல்லி சென்று, பட்டியலின தேசிய ஆணையத்தின் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை சந்திக்கின்றனர்.

அப்போது தமிழகத்தில் பட்டியலின தலைவர்கள் மற்றும் பட்டியலினமக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்துள்ள கொடுமையான 17 சம்பவங்களை சுட்டிக்காட்டி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட உள்ளனர்.

அதன்பிறகு அமித்ஷாவை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை கோர போகிறோம். இந்த கொலை சம்பவத்துக்கு காரணம் என்ன, இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், பொருள் உதவி செய்தது யார், அரசியல் கொலையா என எல்லா கோணத்திலும் ஆராய வேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளரின் கணவரை இதுபோல் கூலிப்படையினர் பட்டப்பகலில் வெட்டியுள்ளனர். அரசியல்வாதிகள், பொதுமக்கள் என யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது.

சென்னை கூலிப்படைகளின் தலைநகரமாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆமைவேகத்தில் நடக்கிறது. ரவுடிகளுக்குபுரியும் மொழியில் நடவடிக்கைஎடுக்கப்படும் என புதிய சென்னைகாவல் ஆணையர் கூறியிருக்கிறார். காவல் துறையின் மீது அதிகஅழுத்தம் கொடுக்கும்போது, காவல் துறையின் மாநிலமாக தமிழகம் மாறிவிடும். அது கூடாது.

என்கவுன்ட்டருக்கு என்கவுன்ட்டர் தான் பதில் என்பது கடந்த காலம்.காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் வழங்கறிஞர்களிடம் பேசி குற்றவாளிகளை சரணடைய வைக்கிறார்கள். இதனால் உண்மை குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள். இவை மாற வேண்டும்.

ரவுடிகளை முறையாக கண்காணிப்பது, குண்டர் சட்டத்தை முறையாக போடுவது, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது என எதுவும் செய்யாமல், துப்பாக்கி மூலம் ரவுடிகளை கட்டுப்படுத்தலாம் என நினைத்தால், இன்னும் 2 ரவுடிகள் உருவாகுவார்கள்.

எனவே, தமிழக அரசு இந்த கொலை விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் 134 கொலை நடந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின், தமிழக காவல் துறையைசீர்த்திருத்தம் செய்து, அவர்களை சுதந்திரமாக பணி செய்ய வைக்க வேண்டும் என்று கூறினார்.

x