பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்


கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி

காஞ்சிபுரம்: இந்தியாவில் பல்முனை தாக்குதல் இருந்தபோதும் அதையெல்லாம் தாண்டி சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2,500 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத மற்றும் இந்திய கலாச்சாரத் துறை நடத்தியது.

கருத்தரங்குக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது:

ஆதிசங்கரர் காட்டிய வழி இந்திய காலச்சாரத்தை பாதுகாக்க மிகவும் முக்கியமானதாக உள்ளது. சனாதன தர்மம் என்பது நமது பாரதத்தின் ஒழுக்க நெறி கொண்ட வாழ்வியல் முறையை குறிப்பது.சனாதன தர்மத்தின் மீது ஆங்கிலேயேர் காலம் முதல்கொண்டு பலமுனை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் அவற்றையெல்லாம் தாண்டி நிற்கிறது. நமது பாரதம் தற்போது வளர்ச்சி பெற்ற பாரதமாக மாறி வருகிறது. ஆதிசங்கரர் போன்றோர் காட்டிய வழியில் நாமும் முன்னேறுவோம் என்றார்.

சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசும்போது, “ஆதிசங்கரர் விழா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்தியாவை தாண்டி நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் கூட நடத்துகின்றனர். ஆதிசங்கரர் அருளிய அத்வைத கருத்துகள் மதங்களை கடந்து முக்கியமானது. வேதங்களின் பொருள்தான் அத்வைதம். அமைதி, ஒற்றுமை,ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதுதான் அத்வைதம்” என்றார்.

பல்கலை. துணைவேந்தர் ஜி.ஸ்ரீநிவாசு வரவேற்றார். கவுரவ விருந்தினர்களாக ஐஐடி தலைவர் வீ.காமகோடி, பேராசிரியர் கிண்டி எஸ்.மூர்த்தி, தேசிய ஒருங்கிணைப்பாளர் என்.வீழிநாதன், பல்கலை. வேந்தர் வி.குடும்பசாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x