ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை - அதிகாரிகள் திடீர் ஆய்வு!


சிதம்பரம் மீன் மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம் மீன் மார்க்கெட் வடக்கு மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். சிதம்பரம் நகர மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் இந்த மார்க்கெட்டுக்கு வந்து மீன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சிதம்பரம் உணவுப் பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) பத்மநாபன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென மீன் மார்க்கெட்டில் உள்ள மீன்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு கடையிலும் மீன்களின் மாதிரி எடுத்து சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட பரிசோதனை வாகனத்துக்கு மீன்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். சில கடைகளில் இருந்த கெட்டுப் போன மீன்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், “மீன்களில் ரசாயனம் கலந்து இருந்தால் அந்த மீனில் ஈக்கள் உட்காராது. அந்த மீனைச் சாப்பிட்டால் நோய்கள் வரும் அபாயம் ஏற்படும். இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும், இந்த மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடம் ரசாயனம் கலந்த மீன்களை விற்கக்கூடாது, கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது” என்றனர். இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

x