குன்னூர்: நடப்பாண்டில் ஏப்ரல் இறுதி வரை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதிமுதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக உதகை, கல்லட்டி, கட்டபெட்டு, கூக்கல் தொரை, கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கூக்கல் தொரை ஆற்றில்வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மேலும், மின் உற்பத்தி நிலையங்களான அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, நடுவட்டம் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் பகுதியில் தண்ட வாளத்தில் பாறைகள் விழுந்தன. இதன் காரணமாக நேற்று மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையோன மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நேற்று காலை முதல் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், படகு இல்லத்தில் தற்காலிக மாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. கோத்தகிரி - இடுகரை சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை பதிவான மழையளவு (மி.மீ): குன்னூர் 171, கீழ் கோத்தகிரி 81, பர்லியாறு 78, எடப்பள்ளி 71, பந்தலூர் 66, கோத்தகிரி 64, கிண்ணக் கொரை 64, தேவாலா 62, பால கொலா 49, கேத்தி 34, சேரங்கோடு 33, கீழ் கோத்தகிரி 32, உலிக்கல் 28, குந்தா 26, கூடலூர் 26, அப்பர் பவானி 23.