சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி


சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., பதவியேற்றார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக அவர் அந்த பதவியில் இருந்து வருகிறார். இதனிடையே சென்னையில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த கொலை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அரசியல் ரீதியான காரணங்களால் இந்த கொலை நடைபெறவில்லை எனவும், தென்மாவட்ட கூலிப்படைக்கு இதில் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஆம்ஸ்டிராங்கின் கொலையை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து சந்தீப் ராய் ரத்தோரை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் காவலர் பயிற்சிப்பள்ளி இயக்குனராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இ.கா.ப., நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல் சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

x