150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை திமுக முன்னாள் அமைச்சரின் சகோதரர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது ஓய்வுபெற்ற தாசில்தார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (75). ஓய்வுபெற்ற தாசில்தாரான திருநாவுக்கரசுக்கு கொரட்டூரில் சொந்தமாக 150 கோடி ரூபாய் மதிப்பில் 14.5 ஏக்கரில் நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன் அபகரித்து கொண்டு மிரட்டுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று திருநாவுக்கரசு புகார் ஒன்றை அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கொரட்டூரில் 1989ஆம் ஆண்டு முதல் தனக்கு சொந்தமாக 14.5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை 55 லட்சம் கொடுத்து பெற்று கொள்வதாக முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் தன்னை அணுகினார். அதற்கு முன் பணமாக 15 லட்சம் கொடுத்து பவர் ஆப் அட்டார்னி பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகை தராமல் தன்னை ஏமாற்றினார். பின்னர் தேவராஜ் பொய்யான ஆவணங்களை தயார் செய்து தன்னுடைய 14.5 ஏக்கர் நிலத்தினை அபகரித்து கொண்டார். இது குறித்து அப்போதைய சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் ஆணையர் விசாரணை செய்து தேவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தேவராஜ், தன் மீது பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மூலம் ரத்து செய்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். அந்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து தேவராஜ் தூண்டுதலின் பேரில் நேற்று முன்தினம் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து இந்த இடம் தேவராஜிக்கு சொந்தமான இடம் எனக்கூறி காவலாளியை மிரட்டி அடித்து துரத்தி விட்டனார். மேலும் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி நிலத்தை தேவராஜ் தரப்பிடம் ஒப்படைத்து விட்டு, பிரச்சினை செய்தால் கைது செய்து விடுவேன் என மிரட்டி சென்றார். எனவே 150 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தேவராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார்.