தொடர் மழை; ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஷிமோகா, ஹாசன், பெல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 4,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே பரிசல் இயக்குபவர்கள் மற்றும் அருவியில் குளிப்பவர்கள் பாதுகாப்பான முறையில் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையை எட்டும் என்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x