தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்; 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு!


தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200 வாகன ஓட்டுநர்கள் பணிபுரித்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் இந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதியை இந்த நிறுவனம் கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட, இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட பணப்பலன்களையும் இந்நிறுவனம் வழங்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு தரப்பிடம் பலமுறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மேலும் தனியார் நிறுவனம் தூய்மை பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதற்கும் உள்ளூர் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூய்மை பாரத வாகன ஓட்டுநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வருகை தந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாநகராட்சி நுழைவு வாயில்களை பூட்டி பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மேயர் ஜெகன், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தூய்மைப் பணியாளர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதி முழுவதும் குப்பைகள் எடுத்தல், தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

x