சென்னை பெரம்பூர் அருகே கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங், கும்பல் ஒன்றால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்டிராங்கின் உடலை சென்னை பந்தர் கார்டன் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி அவரது மனைவி பொற்கொடி, மாநகராட்சியிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், பந்தர் கார்டன் தெரு மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதி என்பதால், அரசு வழங்க முன்வந்த மூலக்கொத்தளம் சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய யோசனை கூறினார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில், உறவினருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்ய பொற்கொடி தரப்பு அனுமதி கோரியது. அந்த இடம் நீர்பிடிப்பு பகுதி என்பதால் வேறு இடத்தை பரிந்துரைக்க கலந்தாலோசித்து சொல்ல நீதிபதி அவகாசம் அளித்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாக தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்டோரும், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் ஆம்ஸ்டிராங்கின் உடல் ஊர்வலமாக 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொத்தூர் கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆம்ஸ்டிராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் பொத்தூரை அடைந்தது. அங்கு பெளத்த முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, ஆர்ம்ஸ்டிராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்டிராங்கின் உடலுக்கு, அவரது மனைவி பொற்கொடி மற்றும் ஒன்றரை வயது மகள் ஆகியோர் இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.