எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் நான் யார்? என ஜெயலலிதா ஆவேசமாகக் கேள்வி கேட்பது போல் நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை, பொதுக்குழுவைக் கூட்டி கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. 60க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும்நிலையில், ஓ.பி.எஸ் உடன் சேர்த்து அவர் அணியில் மூன்று எம்.எல்.ஏக்களே உள்ளனர். இதனிடையே பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர அதிமுக பெண் நிர்வாகி தமிழரசி என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினமும் போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்தவாரம், அம்மா மட்டுமே பொதுசெயலாளர். ஈ.பி.எஸ் ரெஜெக்ட் என போஸ்டர் ஒட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது அடுத்த போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.
அதில், “ஜெயலலிதா மைக் பிடித்து கையை உயர்த்தி, தொண்டர்களே!.. பொதுமக்களே!.. ஈ.பி.எஸ் கழகத்தின் பொதுச்செயலாளர் என்றால் அம்மா ஆகிய நான் யார்?” என நீதி கேட்கும் தொணியில் ஒட்டியுள்ளார். நெல்லை அதிமுகவில் அதிகாரமிக்க பெரிய பதவி எதிலும் தமிழரசி இப்போதும், எப்போதும் இருந்ததும் இல்லை. இவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டும் போஸ்டர்களில் ஓ.பன்னீர் செல்வம் படமும் இருப்பதில்லை. இதனால் நெல்லை அதிமுகவினரே இந்த அம்மாவின் நோக்கமே புரியவில்லையே என குழம்பிப் போயுள்ளனர்.